search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் டெபாசிட் இழப்பார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    ரிஷிவந்தியம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் அவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் செய்தார். நேற்று 2-வது நாளாக மாலையில் ரிஷிவந்தியம், லாலாப்பேட்டை, மணலூர்பேட்டை, காங்கியனூர் ஆகிய பகுதிகளில் டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டார்.

    ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் அவர் பேசியதாவது:-

    கட்சியின் பெயரும், இரட்டை இலை சின்னமும் துரோகிகளின் கையில் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொல்லி இரட்டை இலை சின்னத்தைக் காட்டி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் வழங்கப்படும். அதனை ஆதரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசுடன் போராடி பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்தார். ஆனால் அவரது மறைவுக்கு பின் அவரின் பெயரை சொல்லி ஆட்சியாளர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

    அ.தி.மு.க.வினர் மக்கள் விரும்பாத கூட்டணி வைக்கின்றனர். இவர்கள் டெபாசிட் இழப்பார்கள்.

    ஜெயலலிதா வழியில் தமிழக மக்களின் உயர்வுக்கு நாங்கள் போராடுவதுடன், தலை நிமிர்ந்த தமிழகத்தை உருவாக்குவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ரிஷிவந்தியம் பகுதி மக்களின் கோரிக்கைகளான ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும்.

    ரிஷிவந்தியம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ரிஷிவந்தியத்தில் பி.டி.ஓ., அலுவலகம் அமைக்கப்படும். அர்த்த நாரீஸ்வரர் கோவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும். பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.

    ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ரிஷிவந்தியத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    இன்று மாலை சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சித்தலூர், கொங்கராயப் பாளையம், விருகாவூர், விளம்பாவூர், சின்னசேலம், நைனார்பாளையம், அசக்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொள்கிறார்.  #TTVDhinakaran

    Next Story
    ×