search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே லாரி- வேன் நேருக்குநேர் மோதல்: 6 பேர் பலி
    X

    செய்யாறு அருகே லாரி- வேன் நேருக்குநேர் மோதல்: 6 பேர் பலி

    செய்யாறு அருகே லாரியும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். #accident
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று இரவு மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் புறப்பட்டனர்.

    வேன் செய்யாறை அடுத்த தும்பை என்ற இடத்தில் வந்தபோது, செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செங்கல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்றது. அப்போது லாரியும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியும் ஒருபுறமாக கவிழ்ந்து நின்றது.

    இதில் வேனில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அபயகுரலிட்டனர். இதைபார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்ததும் செய்யாறு போலீசார் மற்றும் உதவி கலெக்டர் அன்னம்மாள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேனில் வந்தவர்களில் 4 பெண்கள், வேன் டிரைவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரியில் இருந்து சரிந்த செங்கற்களுக்கு அடியில் சிக்கி ஆண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த விபத்தில் இறந்தவர்கள் உடனடியாக அடையாளம் தெரியவில்லை.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் பெருமாள் (வயது 48), உமா (வயது 38), குப்பு (48), ஜெயஸ்ரீ (49), அமுலு (37), வேன் டிரைவர் மணிகண்டன் (30) என்பதும் தெரியவந்தது.

    மேலும் வேனில் பயணம் செய்தவர்களில் 31 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக 7 பெண்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோன்று பலியான 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக செய்யாறு- காஞ்சிபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
    Next Story
    ×