search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் - திருநாவுக்கரசர் தகவல்
    X

    ராகுல்காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் - திருநாவுக்கரசர் தகவல்

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என்றும், ராகுல்காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் என்றும் திருநாவுக்கரசர் கூறினார். #Thirunavukkarasar #RahulGandhi
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்கும் வகையில் ‘சக்தி’ திட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ‘சக்தி’ திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், தகவல் ஆய்வுத்துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ‘சக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தனர். வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 8828843022 என்ற செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக(எஸ்.எம்.எஸ்.) அனுப்புவதன் மூலம் ‘சக்தி’ திட்டத்தில் இணையலாம்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், தேசிய செயலாளர்கள் டாக்டர் செல்லகுமார், சி.டி.மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் நாசே ஜெ.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர்கள் கே.தணிகாசலம், கே.சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, எம்.எல்.ஏ.க்கள் எச்.வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் பல்வேறு அணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

    விழாவில் முன்னதாக தகவல் ஆய்வுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.செல்வம் வரவேற்புரையாற்றினார். முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

    விழாவில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    ‘சக்தி’ திட்டத்தின் மூலம் ராகுல்காந்தியுடன் நேரடி தொடர்பு கொள்ளலாம். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளரை தேர்வு செய்ய கருத்து தெரிவிக்கலாம் என்பனவற்றை மனதில் கொண்டு கட்சியினர் அனைவரும் ‘சக்தி’ திட்டத்தில் இணைய வேண்டும். முதல் கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் பேரை ‘சக்தி’ திட்டத்தில் சேர்க்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாவட்டம் தோறும் வாக்குச்சாவடி அளவில் கட்சியின் பலத்தை அதிகரிக்க அதிக அளவில் மக்களை ‘சக்தி’ திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ராகுல்காந்தி மாநிலங்கள் தோறும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, வருகிற பிப்ரவரி 15 முதல் 20-ந்தேதிக்குள் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் வலுமையாக அமைந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின் போது நான்(திருநாவுக்கரசர்) தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருப்பேன். அதில் மாற்றம் எதுவும் இல்லை. எனவே எல்லோரும் வதந்திகளை நம்பாமல் ஒற்றுமையாக செயல்பட்டு தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல்காந்தியை பிரதமராக்குவது ஒன்றையே இலக்காக வைத்து செயல்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirunavukkarasar #RahulGandhi
    Next Story
    ×