search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - மோடி, அமித்ஷா, நிதின்கட்கரி, யோகிஆதித்யநாத் தமிழகத்துக்கு படையெடுப்பு
    X

    பாராளுமன்ற தேர்தல் - மோடி, அமித்ஷா, நிதின்கட்கரி, யோகிஆதித்யநாத் தமிழகத்துக்கு படையெடுப்பு

    பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின்கட்கரி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர். #ParliamentElection #PMModi #NitinGadkari

    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதா பிரசார திட்டத்தை கட்சி மேலிடம் வகுத்து கொடுத்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் மார்ச்-2ந்தேதி வரை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அனைத்து தொகுதிகளிலும் ஒரு கட்ட பிரசாரத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பா.ஜனதா தலைவர்கள் பலர் படையெடுக்கிறார்கள்.

    பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி மதுரை வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

    மீண்டும் அடுத்தமாதம் (பிப்ரவரி) 10 மற்றும் 19-ந்தேதி தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார். அப்போது சென்னை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 3 நகரங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த வாரம் ஈரோடு வருகிறார்.

    மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி சென்னையிலும், ரவி சங்கர்பிரசாத் வேலூரிலும், நிர்மலாசீதாராமன் ராமநாதபுரத்திலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் கன்னியாகுமரியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதலில் கலந்துரையாடுவார்கள். அதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள ஊர் பெரியவர்கள், சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுவார்கள்.

     


    மாலையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவார்கள். அந்த கூட்டத்துக்கு ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்காக 13 ஆயிரம் பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரிடமும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பயன் அடைந்த பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் 15 முதல் 28-ந்தேதி வரை ஒவ்வொரு பொறுப்பாளரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பகுதிகளை சேர்ந்த பயனாளிகளை நேரடியாக சந்திக்க வேண்டும். 5 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு இடத்தில் அந்த பகுதி பயனாளிகள், பொது மக்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி மத்திய அரசின் திட்டங்கள் பற்றி தெரிவிக்கவேண்டும்.

    அடுத்தமாதம் 2-ந்தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்களுடன் நேரடியாக பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு எல்.இ.டி. திரை அமைத்து பொதுமக்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்படுகிறது.

    வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21 ஆகிய நாட்களில் நடைபெறும் மான் கி பாத் நிகழ்ச்சியை 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு இடத்தில் நேரடியாக ஒளிபரப்பி பொதுமக்களுடன் அமர்ந்து கட்சி நிர்வாகிகளும் பிரதமர் உரையை கேட்க வேண்டும்.

    மத்திய அரசின் வீடுகட்டும் திட்டம், பயிர்க்காப்பீட்டு திட்டம், இலவச சமையல் கியாஸ், மருத்துவகாப்பீட்டு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். இதுபற்றிய விவரங்களை பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்து சொல்ல திட்டமிட்டு உள்ளார்கள்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மத்திய அரசு திட்டங்களின் பயனாளி குடும்பங்களின் பெண்களை திரட்டி அடுத்தமாதம் 26-ந் தேதி தாமரை தீபம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மார்ச் 2-ந்தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தலைவர்கள் வருகை மற்றும் தொடர் பிரச்சாரங்களால் இப்போதே தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. #ParliamentElection #PMModi #NitinGadkari

    Next Story
    ×