search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்.
    X
    பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்.

    சென்னையில் கிராமிய பாரம்பரியத்தில் களைகட்டிய பொங்கல் விழா

    சென்னையில் கிராமிய பாரம்பரியத்தில் பாவாடை-தாவணி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவை மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். #Pongal
    சென்னை:

    தை திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    பொங்கல் விழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பட்டு, டிசைன்ஸ் சேலை மற்றும் பாவாடை-தாவணி அணிந்து வந்து அசத்தினார்கள். கிராமப்புறத்தை போன்ற சூழல் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்டு இருந்தது.

    பொங்கல் பானை வைத்து மாணவிகள் பொங்கலிட்டனர். பொங்கல் பானை பொங்கி வரும்போது, அவர்கள் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறியும், குலவையிட்டும் விழாவை களைகட்ட செய்தனர்.

    கிராமத்தில் திருவிழா காலங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளை போல, இளநீர், ஐஸ், பஞ்சு மிட்டாய், மக்காச்சோளம், பணியாரம் உள்பட பல்வேறு விற்பனை கடைகளை மாணவிகளே ஏற்பாடு செய்து இருந்தனர். அதேபோல், ராட்டினம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மாணவிகள் ஏறி உற்சாகம் அடைந்தனர்.

    மாணவிகள் தங்கள் கை வண்ணத்தில் விதவிதமான வண்ணங்களில் கோலமிட்டனர். அதுமட்டுமில்லாமல் நாட்டுப்புற கலைகளை போற்றும் வகையில் தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அரங்கேற்றினார்கள். விழாவின் இறுதியில் மாட்டு வண்டியில் ஏறி மாணவிகள் ஒய்யாரமாக பயணம் செய்தனர்.

    விழா குறித்து மாணவிகள் கூறுகையில், “தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் உலகில் நம்முடைய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் போற்றுவது நமது கடமை. அந்த வகையில் பொங்கல் விழாவை கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இனி வரக்கூடிய தலைமுறைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான கோரிக்கை” என்றனர்.  #Pongal
    Next Story
    ×