search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடுவோம்- முத்தரசன் அறிவிப்பு
    X

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடுவோம்- முத்தரசன் அறிவிப்பு

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    பெருந்துறை:

    பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் போலீசார் மிரட்டி அத்து மீறும் செயலில் ஈடுபடுகின்றனர்.

    அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு செல்லக் கூடாது என சர்வாதிகார போக்குடன் ஈரோடு மாவட்ட போலீசும் செயல்பட்டு வருகிறது. எங்களது கட்சியின் மூத்த வக்கீல் மோகன் மீது வழக்கு போட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம். எங்களது மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ளது.

    அவரது மகள், மருமகன் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் நீங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது மந்திரி உத்தரவு என மிரட்டியுள்ளனர்.


    இது குறித்து கேட்டதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதால் தான் தடுத்து நிறுத்தினோம் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே மேற் கொண்டு இதுபோன்ற மிரட்டல்கள் நடக்குமாயின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    Next Story
    ×