search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைந்த சின்னதம்பி யானை
    X

    கோவை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைந்த சின்னதம்பி யானை

    கோவை அருகே மீண்டும் ஊருக்குள் நுழைந்த சின்னதம்பி யானையை பார்த்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் இன்று அதிகாலை ஒற்றை காட்டுயானை அங்குள்ள கிருஷ்ணசாமி கோவில், தர்மராஜர் கோவில் எதிரே வந்தது.

    அங்கு ஜெகநாதன் என்பவரின் மனைவி வளர்மதி (வயது 51) நடத்தி வரும் மளிகை கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, உப்பு, பருப்பு, புளி, வெல்லம் உள்ளிட்டவைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. இதில் 2 மூட்டை அரிசியை துதிக்கையால் தூக்கிச்சென்றது.

    பின்னர் அங்குள்ள விநாயகர் நகரில் பழனிச்சாமி, அம்மாயியம்மாள் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த வாழை மற்றும் விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது.

    ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் அங்குள்ள மலைப்பகுதிக்குள் விரட்டினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, கணுவாய், அப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகன், சின்னத்தம்பி ஆகிய 2 காட்டுயானைகள் சுற்றித்திரிந்து குடியிருப்பை நாசப்படுத்தின. அதனை இடமாற்றம் செய்ய 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டன.

    அது பலன் அளிக்காமல்போகவே மயங்க ஊசி செலுத்தி விநாயகன் என்ற யானை பிடிக்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சின்னத்தம்பி என்ற யானை தப்பியது. அந்த யானை தான் இன்று ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனையும் இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோவிந்தராஜ் நகர், தர்மராஜ் நகர், பாலாஜி நகர், சூர்யா கார்டன், பன்னீர் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

    மீண்டும் காட்டுயானை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×