search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது - திருமாவளவன்
    X

    மு.க.ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது - திருமாவளவன்

    மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #MKStalin #RahulGandhi

    வேலூர்:

    அம்பேத்கரின் 63-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருப்பது இந்திய அரசியல் அரங்கில் மகத்தான திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த முன்மொழிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழி மொழிகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கு மேல் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய இந்திய அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. கவர்னருக்கு அதிகாரமும் இருக்கிறது. இதனை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக முதல் - அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில், கவர்னர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கவர்னர் அமைதிகாத்திட வாய்ப்பில்லை என நம்ப வேண்டி இருக்கிறது.

    எனவே கவர்னர் விரைந்து இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய முன் வரவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.


    இடைத்தேர்தல் இப்போது வருமா? என தெரியவில்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு கட்டாயம் இடைத்தேர்தல் வந்தே தீரும். எந்த முடிவாக இருந்தாலும், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவெடுக்கும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். ஆனாலும் அதை ஏற்க இயலவில்லை. மிகவும் வேதனை அளிக்க கூடிய தீர்ப்பு. இந்த ஆலை விவகாரம் தொடர்பாக 13 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதார சீர்கேடு அதிகமாக இருக்கிறது. பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    இவ்வாறான சூழ்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு ஆணையை வைத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டது தான், இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தீர்ப்பை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #RahulGandhi

    Next Story
    ×