search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவு: பழனிசாமி அரசின் அலட்சியமே காரணம்- தினகரன் குற்றச்சாட்டு
    X

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவு: பழனிசாமி அரசின் அலட்சியமே காரணம்- தினகரன் குற்றச்சாட்டு

    எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியமாக இருந்ததால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #SterlitePlant #Edappadipalaniswmai #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது தூத்துக்குடி பகுதி மக்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் 13 உயிர்கள் அநியாயமாக பலியானதற்கு பின்பும், சற்றும் இரக்கமின்றி மேம்போக்காக இவ்வழக்கை பழனிசாமி அரசு கையாண்டுள்ளது. இவ்வழக்கின் போக்கை வைத்தே இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

    ஆலையை மூடுவதாக மேம்போக்காக ஓர் அரசாணை வெளியிட்டது தவறு என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் அதனை சுட்டிக்காட்டியதை இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். ஆனாலும், அனைவரும் சுட்டிக்காட்டியபடி, அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுத்து அந்த ஆலையை மூட இந்த அரசு ஏனோ விரும்பவில்லை.


    அதன் பலனைத்தான் இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் விஷயம் மட்டும் அல்லாது, தமிழக மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டப் போராட்டங்களில் நேர்த்தியான வாதங்களை முன்வைக்காமலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்துள்ள பழனிசாமி அரசு, இப்போதாவது தூத்துக்குடி மக்களின் நலன் கருதி, சட்டமன்றத்தைக் கூட்டி "தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம்" என்ற கொள்கை முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றி, அதன் பின் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்வரவேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு, அரசியல் ரீதியான அழுத்தங்களையும் கொடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட முழு மனதோடு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterlitePlant #Edappadipalaniswmai #TTVDhinakaran
    Next Story
    ×