search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் மீது அக்கறை இல்லை: மத்திய, மாநில அரசு மீது ரஜினி பாய்ச்சல்
    X

    குழந்தைகள் மீது அக்கறை இல்லை: மத்திய, மாநில அரசு மீது ரஜினி பாய்ச்சல்

    குழந்தை கடத்தலின் பின்னணியில் மாபியா கும்பல் இருக்கிறது. போலீசார் இதை கண்டுகொள்வதில்லை என்று ரஜினி குற்றம்சாட்டியுள்ளார். #Rajini
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘தயா பவுண்டேசன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில் திருவான்மியூரில் குழந்தைகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் குழந்தை கடத்தல் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை என்றும் போலீசார் இந்த வி‌ஷயத்தை கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சு வருமாறு:-

    குழந்தைகளின் நிம்மதியை பெரியவர்கள்தான் கெடுக்கிறார்கள். வீட்டில் தொடங்கி, பள்ளிக்கூடம், சமுதாயம் வரையில் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துக் கொண்டே உள்ளனர்.

    அழகான பூக்களாக திகழும் குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்காக தீட்டப்படும் திட்டங்கள் சரியாக உள்ளன. இதற்காக பணம் செலவழிக்கிறார்கள்.

    ஆனால் நமது மத்திய - மாநில அரசுகளுக்கு குழந்தைகள் மீது அக்கறை இல்லை. குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை. அப்படி கவனிக்காத நாடு எப்படி நல்ல நாடாக இருக்கும்.

    குழந்தைகள் நலனுக்காக எனது மனைவி இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதனை கையில் எடுத்துள்ளன.

    அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லாத காரணத்தால்தான் பெரிய முதலாளிகள் குழந்தைகள் நலன் காக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

    இதற்காக லதா செய்திருக்கும் காரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ரஜினியின் மனைவி லதா என்று சொல்லி கொண்டிருக்கும் காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினி என்று சொல்லும் காலம் வரவேண்டும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சேவையாகும்.

    ‘குழந்தைகளுக்கு அமைதி’ என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்பது லதாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அது இன்று நனவாகி உள்ளது.

    சாலைகளில் பிச்சையெடுக்கும் பிள்ளைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று உன்னை பிச்சை எடுக்க வைப்பது யார்? என்று விசாரணை நடத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை.

    குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கும்பலே உள்ளது. அரசாங்கமும், போலீசும் இவர்களை கவனிப்பதே இல்லை. சமூகம் கூட அவர்களை பார்த்துக்கொண்டு அப்படியே சென்று விடுகிறது.

    குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களின் முகவரியை அழித்து தாய் - தந்தை இல்லாத அநாதைகளாக ஆக்கி விடுகிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பிச்சைக்காரர்களாக, கிரிமினல்களாக, நோயாளிகளாக மாறி வாழ்க்கை முழுவதும் செத்து கொண்டே இருக்கிறார்கள்.

    இது எவ்வளவு பெரிய குற்றம். கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்களோ? அதே தண்டனையை குழந்தைகளை கடத்தும் மாபியாக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
    Next Story
    ×