search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு- காலில் விழுந்து பெண்கள் கதறல்
    X

    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு- காலில் விழுந்து பெண்கள் கதறல்

    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முன்னதாக அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை மேற்கொண்டனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டது.

    புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் பரிதவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நேற்று முன்தினமே சென்னை வந்தனர். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு மத்திய குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். இதையடுத்து காலை 10.50 மணிக்கு முதல்-அமைச்சர் அறையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 45 நிமிடங்கள் இந்த கூட்டம் நடந்தது.

    இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் 7 பேரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேசினர். காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 12.20 மணிக்கு முடிந்தது.

    பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டது. ஒவ்வொரு துறை வாரியாகவும் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய குழுவினருக்கு முதல்- அமைச்சர் தெளிவாக விளக்கினார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறிப்பாக விவசாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன உதவிகள் தேவை என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    ‘பவர் பாய்ண்ட்’ மூலமாக துறைவாரியான விவரங்களையும் காட்சிகளோடு பட்டியலிட்டு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினோம். இதிலிருந்து எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மத்திய குழுவினர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 3.40 மணிக்கு சென்றனர்.

    அங்கு அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்கள் கணேஷ் (புதுக்கோட்டை), ராஜாமணி (திருச்சி) மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு அக்குழுவினர் சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.

    அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கலெக்டர் கணேஷ் ஆகியோர் புயல் பாதிப்பை விளக்கி கூறினர்.

    அப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள் காலில் விழுந்து கதறி அழத்தொடங்கினர்.

    “அய்யா...புயலால் எங்கள் வாழ்க்கையே போச்சு. இனி என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. குடிசைகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள்தான் வழி சொல்லவேண்டும். கடந்த 9 நாட்களாக மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகிறோம்” என கண்ணீர் விட்டனர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி தோளில் தட்டிவிட்டு தேற்றிய மத்திய குழுவினர், “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நியாயமாக செய்ய வேண்டியதை நிச்சயமாக செய்வோம்” என உறுதி அளித்தனர்.

    அப்போது, உடன் வந்த அமைச்சர், கலெக்டர் ஆகியோரும் ஆறுதல் கூறினர்.

    தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.

    இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்ட முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.

    இரவு தஞ்சாவூர் புறப்பட்டு சென்ற குழுவினர் அங்குள்ள சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் திரும்புகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு திருவாரூர் செல்கின்றனர்.

    அங்கு மாலை 3.30 மணி முதல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று இரவு நாகப்பட்டினம் சென்று, ஓய்வெடுக்கின்றனர்.

    நாளை (26-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். மதியம் 1 மணிக்கு நாகப்பட்டினத்தில் சிறிது ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்கின்றனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    Next Story
    ×