search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி
    X

    மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி

    மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவர் மனைவி மலர், மகன் ஜெயக்குமார்.

    இவர்கள் 3 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக “கந்த சுவாமி” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினர்.

    350, 500 மற்றும் 750 என மூன்று வகையான மாதாந்திர சீட்டு நடத்தி 12 மாதங்களுக்கு பிறகு தீபாவளிக்கு முன்பு தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு கொடுப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    அவர்களிடம் மதுராந்தகம், திண்டிவனம், அச்சிறு பாக்கம், சித்தாமூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு பணம் கட்டி வந்தனர்.

    இந்த சீட்டுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. 2 மாதத்திற்குள் தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்.

    ஆனால் இதுநாள் வரை வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பொருட்களும் வழங்கப்படவில்லை. இதுபற்றி வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சங்கர் குடும்பத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை.

    மேலும் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது. இதனை அறிந்த சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு மதுராந்தகத்தில் உள்ள சங்கர் வீட்டை முற்றுகையிட்டு கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சங்கர் குடும்பத்தினரிடம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு கட்டி இருந்தனர். எனவே சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி நடந்து இருக்கும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×