search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம்- கலெக்டர்
    X

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம்- கலெக்டர்

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் 6 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் குறித்து எவ்வித பீதி அடைய வேண்டாம் எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடன் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்களை வட்டார அளவில் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் 24/ 7 என்ற சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார நடமாடும் மருத்துவக்  குழுவினர் அனைத்து பள்ளிகளிலும் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் அனைத்து கிராமங்களிலும் மற்றும் காய்ச்சல் கண்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

    அனைத்து பகுதிகளில் பொது சுகாதாரதுறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலமாக தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மஸ்தூர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றும் நீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களினை அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், கொசு ஒழிப்பு புகை மருந்து அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உப்பு கரைசல். நில வேம்பு கசாயம் மற்றும் சோற்றுக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீரில் குளோரினேசன் உள்ளதை உறுதி செய்த பின் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மூலமாக அனைத்து அங்கன்வாடிகளில் வரும் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல் வழங்க அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×