search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே கம்யூனிஸ்டு கட்சியின் நோக்கம்- ஜி.ராமகிருஷ்ணன்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே கம்யூனிஸ்டு கட்சியின் நோக்கம்- ஜி.ராமகிருஷ்ணன்

    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது என்று ஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை அமைத்துள்ளது. இதனை விளம்பர படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வருகிறது.

    தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தமிழக சட்டசபையில் அமைச்சரே தெரிவித்து உள்ளார். அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்பட வில்லை.

    எனவே தான் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.

    அடிமைகள் ஒருபோதும், தங்களை அடிமைகள் என்று ஒப்புக்கொள்வதில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்ற துடிக்கும் மக்கள் விரோத திட்டங்களை இப்போதைய அரசு எதிர்ப்பதில்லை.

    அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதுதான் இதற்கு காரணமாகும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனையில் அதிகாரிகள் சிக்கியிருப்பது இதற்கு எடுத்து காட்டாகும்.

    தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கூடுதல் வரிவிதிப்பை அரசு அமல்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது வரி விதிப்பை அமல் படுத்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வி.ஐ.பி.க்களை தப்ப வைக்க இந்த நடவடிக்கையா என்று எண்ண தோன்றுகிறது.


    எனவே இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்.

    கேரளாவில் நடந்து வரும் சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தும் கேரள அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

    அரசியலுக்காக போராடும் இவர்கள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டுடன்தான் போராடுகிறார்கள்.

    குமரியில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இங்கு கொண்டுவரப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

    இம்மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இம்மாத இறுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை மாநாடு நடக்கிறது. டிசம்பர் மாதம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர்முகம்மது, லீமா ரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    Next Story
    ×