search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்- கவர்னர் கிரண்பேடி
    X

    நாராயணசாமியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்- கவர்னர் கிரண்பேடி

    கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    யூனியன் பிரதேசமான புதுவையில் யாருக்கு அதிகாரம்? என்பதில் தொடங்கிய மோதல் முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொழில் அதிபர்களை மிரட்டி சமூக பங்களிப்பு நிதியை கவர்னர் கிரண்பேடி வசூலிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார் கூறினார்.

    அதோடு விதிமுறைக்கு உட்படாமல் வசூலிக்கப்பட்டுள்ள சமூக பங்களிப்பு நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி தரப்பில் கவர்னர் மாளிகையில் எந்த பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றும் புதுவையில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கும், கொடையாளிகளுக்கும் இடையே கவர்னர் மாளிகை இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுகிறது என்று மறுப்பு தெரிவித்தார்.

    அதோடு ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொல்வதால் பொய் உண்மையாகாது என்றும், தன் மீதான பொறாமையால் முதல்- அமைச்சர் நாராயணசாமி, தமக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.


    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் போல் நான் நாகரீகம் இல்லாமல் பொய் சொல்கிறார் என கூறமாட்டேன். ஆனால், கவர்னர் கிரண்பேடி உண்மைக்கு புறம்பாகவே பேசி வருகிறார் என்று கூறினார்.

    மேலும், அரசு சார்பு நிறுவனத்திற்கு சம்பளம் வழங்க கடன் கேட்ட கோப்பை கவர்னர் கிரண்பேடி திருப்பி அனுப்பி விட்டார். இதனால் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    இதனையும் கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார், அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை அங்கீகாரம் கொடுக்காத போது அரசு சார்பு நிறுவனத்துக்கு கடன் வழங்க கவர்னராலும் ஒப்புதல் அளிக்க முடியாது, இலவச அரிசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பயன்பாட்டிற்கு திருப்ப முடியாது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி முழுமையான தகவல்களை மக்களுக்கு தரவில்லை. இப்போது என்னையும், முதல்-அமைச்சரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும், அதற்கு நான் தயார், முதல்- அமைச்சர் நாராயணசாமி தயாரா?

    இவ்வாறு டுவிட்டரில் கிரண்பேடி கூறியுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    Next Story
    ×