search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசிய 17 பேர் கைது
    X

    வந்தவாசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீசிய 17 பேர் கைது

    விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது நெமந்தகார தெருவில் ஒருவர் இறந்துவிட்டதால் அந்த தெரு வழியாக செல்லக்கூடிய ஊர்வலம் மக்தும்மரைக்காயர் தெரு வழியாக சென்றது.

    அந்த வழியாக ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்காமல் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது ஊர்வலத்தினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதில் ஊர்வலத்தில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். அதேபோன்று பழைய பஸ்நிலையம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது ஊர்வலத்தினர் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கினர். ஊர்வலத்தினரும் பதிலுக்கு கல்வீசினர்.

    இந்த சம்பவத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×