search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு- கலெக்டர் வழங்கினார்
    X

    கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு- கலெக்டர் வழங்கினார்

    விருதுநகர் மாவட்ட 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிவஞானம் பரிசுத்தொகை வழங்கினார்.

    விருதுநகர்:

    தமிழகப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்புத்திறனை வெளிக் கொணரும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடைபெற்ற போட்டி களில், கவிதைப் போட்டியில் திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவீட்டி சுவேதா முதலிடத்தினையும், மே.சின்னையாபுரம் தேவ சகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி 2-ம் இடத்தையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா 3-ம் இடத்தினையும் பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் சாரதா சக்தி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி முதலிடத்தினையும், திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோதிகா 2-ம் இடத்தினையும், சாத்தூர் சா.இ.நா.எட்வர்டு மேல் நிலைப்பள்ளி மாணவன் திருச்செந்தில் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் ராஜ பாளையம் ரமணா வித்யாலயா மாணவி நேக மீனா முதலிடத்தினையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 2-ம் இடத்தையும், வில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி விஷ்ணுப்பிரியா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு ரூ.66 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    நிகழ்வுகளில் விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சுசிலா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×