search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி சமாதியில் பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.
    X
    கருணாநிதி சமாதியில் பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.

    கருணாநிதி சமாதியில் தினம் புதுப்புது அலங்காரம்

    மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் கருணாநிதி சமாதியில் தினமும் புதுப்புது அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாள் வைக்கப்படும் அலங்காரம் மறுநாள் காலை 7 மணிக்கு அகற்றப்பட்டு, புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #karunanidhi #DNK
    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதியில் நேற்று முன்தினம் 7 அடி உயரத்தில் பேனாவும், 6 அடி அகலத்தில் கருப்பு கண்ணாடியும் வைக்கப்பட்டிருந்தது. கருணாநிதி பயன்படுத்திய பேனா மற்றும் கண்ணாடி போன்றே அவற்றை கலை இயக்குனர் ஜே.பி.கிரு‌ஷ்ணா குழுவினர் வடிவமைத்து இருந்தனர்.

    ‘உழைப்பு! உழைப்பு! உழைப்பு! அது தான் மு.க.ஸ்டாலின்’ என்று கருணாநிதி குறிப்பிட்ட வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது தி.மு.க. தொண்டர்களையும், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.

    இந்தநிலையில் நேற்று அந்த அலங்காரம் அகற்றப்பட்டு சூரியகாந்தி பூக்கள் மூலம் புதிய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க. பொதுக்குழுவில் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதையொட்டி, மு.க.ஸ்டாலின் சிந்தனையின் பேரிலே கருணாநிதி சமாதியில் பேனா, கண்ணாடி வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் வைக்கப்படும் அலங்காரம் மறுநாள் காலை 7 மணிக்கு அகற்றப்பட்டு, புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டசெயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி அவர்கள் மேற்பார்வையில் தினமும் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறுஅவர் கூறினார்.

    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக தினமும் ஏராளமான தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை துறைமுகம் பகுதி தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ஊர்வலமாக வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்களுடன் சென்னை மண்ணடியை சேர்ந்த தனியார் பள்ளிமாணவிகளும், ஆசிரியர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். 
    Next Story
    ×