search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு சென்ற காரைக்குடி பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
    X

    கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு சென்ற காரைக்குடி பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் காரைக்குடியில் இருந்து சபரிமலைக்கு சென்ற அய்யப்ப பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி பருப்பூரணி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் விரதம் இருந்து மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்.

    இதையடுத்து கடந்த 12-ந்தேதி இரவு காரைக்குடியில் இருந்து 5 பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள் முதலில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நெல்லை, செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்தில் உள்ள சபரி மலைக்கு சென்றனர்.

    அப்போது செங்கோட்டையை தாண்டி அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையும்போது அம்மாநில போலீசார் அவர்களை நிறுத்தி தற்போது கேரளாவில் கடும் மழை பெய்து ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சபரிமலை, பம்பை தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் நீங்கள் அங்கு செல்ல முடியாது. எனவே நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் அங்கிருந்து நேற்று அதிகாலை காரைக்குடிக்கு வந்தனர். பின்னர் பருப்பூரணி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு வந்து இருமுடிகளை இறக்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர். 
    Next Story
    ×