search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரி மருத்துவமனையில் 10 வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை
    X

    காவேரி மருத்துவமனையில் 10 வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 10-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    கழுத்தில் மாட்டப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித்தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு சீரானது. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    கருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக்கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார். அவர் உடல்நிலை அப்படியே உள்ளது.

    இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். சமீபத்தில் கருணாநிதி கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    லண்டனில் இருந்து வந்துள்ள முகமதுரேலா தெரிவிக்கும் ஆலோசனைப் படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது. ஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு மெல்ல பலன் கிடைத்து வருகிறது.

    கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு கடந்த 2 தினங்களாக மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள அணுஅளவிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.

    கருணாநிதியால் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தெரிந்துக் கொள்ள முடிகிறது. தன்னை பார்க்க யார்-யார் வருகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்து கொள்வதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    என்றாலும் கருணாநிதி உடல்நிலையில் மிக வேகமான முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. மெதுவாக அவரது உடல்நிலை சீராகி வருகிறது. எனவே இந்த வார இறுதியில்தான் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    Next Story
    ×