search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரங்கிமலையில் விபத்து நடந்த இடத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை
    X

    பரங்கிமலையில் விபத்து நடந்த இடத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை

    சென்னை பரங்கிமலையில் விபத்து நடந்த இடத்தில் மின்சார ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மின்சார ரெயில் படிக்கட்டில் அதிகாரிகள் தொங்கிச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த கோர விபத்துக்கு பரங்கிமலை 4-வது நடைமேடையில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் தான் காரணமாக கூறப்படுகிறது. இந்த சுவரை அகற்றவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தாலும், ‘சுவர் அகற்றுவதற்கு வாய்ப்பில்லை’ என்று ரெயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் மாற்றுவழி கையாளும் வகையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குறிப்பிட்ட அந்த கான்கிரீட் சுவர் - தண்டவாளம் இடையேயான தூரம் அளவிடப்பட்டது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டு, படிக்கட்டில் ரெயில்வே அதிகாரிகள் ஏறிக்கொண்டனர்.

    கான்கிரீட் தடுப்பு சுவர் அருகே ரெயிலை மெதுவாக இயக்கி, ரெயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகள் முதுகில் அணிந்திருந்த ‘பேக்’, அந்த தடுப்பு சுவரில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொஞ்சம் வேகமாக மின்சார ரெயிலை இயக்கி சோதனை செய்து பார்த்தனர். ரெயிலில் இருந்தபடியே தடுப்பு சுவரை பிடித்தும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்காக விபத்து நடந்த குறிப்பிட்ட அந்த மின்சார ரெயிலே கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அதே வழித்தடத்தில் உள்ள இரும்புத்தூண் ஒன்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து ஆய்வு விவரங்கள் அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதேவேளையில் 5-வது நடைமேடையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.  #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident 
    Next Story
    ×