search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலைக்கு ஆதரவு - ரஜினியின் கருத்துக்கு அன்புமணி எதிர்ப்பு
    X

    8 வழிச்சாலைக்கு ஆதரவு - ரஜினியின் கருத்துக்கு அன்புமணி எதிர்ப்பு

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலை குறித்து ரஜினிகாந்த் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் நடிகர்களுக்கு மக்கள் பிரச்சினை எங்கே தெரியப் போகிறது என்று கூறியுள்ளார். #AnbumaniRamadoss #Rajinikanth
    சென்னை:

    பா.ம.க. 30-வது ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதையொட்டி தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த 29 ஆண்டுகளில் நாங்கள் நடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. அதே நேரத்தில் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

    தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளையும், தமிழகத்தில் ஒரு இட ஒதுக்கீட்டையும் பெற்றிருக்கிறோம்.

    மதுவுக்கும், புகைக்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். இன்று தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் மதுவிலக்கை கொள்கை அளவில் ஏற்று இருப்பது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

    தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து 2008-ம் ஆண்டிலேயே நாங்கள் அடிக்கல் நாட்டினோம். மேலும் பல நல்ல திட்டங்களுக்கு நாங்கள் ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை செய்து முடிக்கவில்லை.

    3 வருடம் போராடி குட்காவுக்கு தடை கொண்டு வந்தேன். ஆனால் தமிழ்நாட்டில் இப்போதும் குட்கா விற்கப்படுகிறது. அதுவும் அமைச்சர்கள, அதிகாரிகள் ஆதரவோடு நடக்கிறது.

    ஒரே நேரத்தில் பாராளுமன்ற -சட்டமன்ற தேர்தலை நடத்துவது சரியான முடிவு அல்ல. அப்படி நடத்தினால் மாநில பிரச்சினைகள் அடிபட்டு போகும்.

    சேலம் பசுமை வழிச் சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால் நடிகர்களுக்கு மக்கள் பிரச்சினை எங்கே தெரியப் போகிறது.

    அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும், ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் நல்லதை செய்வார்கள். ஆனால் எடப்பாடி அரசு இனி வரப்போவதில்லை என்பது தெரியும். எனவே அடிக்கும் வரை அடிப்போம் என்று அடிக்கிறார்கள். இங்கு நடக்கும் ஊழல் மத்திய அரசுக்கும் தெரியாததல்ல. ஊழல் செய்வதும், ஊழலுக்கு துணை போவதும் ஒன்றுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்சசியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #PMK #AnbumaniRamadoss #Rajinikanth
    Next Story
    ×