search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்

    இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவெளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சென்ற கல்வியாண்டில் 5 மாணவர்களை மட்டுமே வைத்து பள்ளி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பெற்றோர்கள் மற்றும் அரசு பள்ளி மீட்புக்குழு இயக்கத்தினர் முயற்சியில் கிராமத்தில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி முதல் கட்டமாக 13 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளனர்.



    மேலும் சென்ற ஆண்டு பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியை சரோஜா என்பவர் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாததால், கோரியம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியை வளர்மதி இலையூர் மேலவெளி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியையாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கோரியம்பட்டி பள்ளியில் சென்ற கல்வியாண்டில் இரண்டு 5-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் வைத்து 2 ஆசிரியர்களுடன் பணி புரிந்து வந்தார். தற்போது இந்த ஆண்டு அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால், இலையூர் மேலவெளி பள்ளிக்கு தலைமை ஆசிரியை பணிக்கு வளர்மதி விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

    இதனை அறிந்த இலையூர் மேலவெளி பொதுமக்கள், பெற்றோர்கள் எங்கள் ஊர் பள்ளிக்கு பெண் தலைமையாசிரியை வளர்மதி வேண்டாம் என கூறி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து வளர்மதி இலையூர் மேலவெளி பள்ளிக்கு செல்வதற்காக அதிகாரிகளை சந்திக்க சென்றதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியின் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டு பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், பொதுமக்களிடம் உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தரும் படி கூறினார். அதன்படி, பொதுமக்கள் மனு எழுதி கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட கிராம நிர்வாக அதிகாரி, இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இருப்பினும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம், ஆண்டிமடம் உதவி தொடக்க கல்வி அதிகாரி மதியழகன், வருவாய் ஆய்வாளர் திலகவதி ஆகியோர் அரசு பள்ளி மீட்புக் குழு இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில், எங்களது ஊரில் உள்ள பள்ளிக்கு ஒரு ஆண் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கின்ற ஆசிரியை மட்டுமே போதும் எனவும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    Next Story
    ×