search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு புழக்கம்
    X

    டெல்டா மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு புழக்கம்

    தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கோவை சாய்பாபா காலனியில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுக்களை அச்சடித்த கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கியது. அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் மற்றும் கேரளாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் எதிரொலியாக ரூ.2000 நோட்களை வாங்க வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் மதுவாங்க கூட்டம் நிரம்பி வழிவதால் டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 கள்ள நோட்டுக்களை மாற்ற முயற்சி செய்வது தெரியவந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நானலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 35). இவர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி அதனை வெளியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இவர் நேற்று களப்பாலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி கொண்டு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்துள்ளார். அதனை வாங்கி பார்த்த சூப்பர்வைசர் ராஜசேகரன் அது கள்ள நோட்டு போல் இருந்ததால் களப்பால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹரி கிருஷ்ணன் கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டை ஆய்வு செய்தனர். இதில் அது கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர்.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது தெரியவந்ததுள்ளதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கைதான ஹரி கிருஷ்ணனிடம் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்தது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×