search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்
    X

    குட்கா ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்

    குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #GutkhaCBIProbe
    சென்னை:

    குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களால், அதை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் வருவதால், இவற்றை விற்பனை செய்யவும், குடோன்களில் சேமித்து வைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகம் முழுவதும் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    இதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த சீனிவாசராவ் என்பவருக்கு சொந்தமாக செங்குன்றத்தில் உள்ள குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அமைச்சர், டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் கொடுத்த விவரங்களை கொண்ட ‘டைரி’ ஒன்று அதிகாரிகளிடம் சிக்கியது. அவர் வருமான வரி அதிகாரிகளிடம் வாக்கு மூலமும் அளித்தார்.

    இதுகுறித்து அப்போதைய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை உயர் அதிகாரி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து, இந்த குற்றச்சாட்டில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதால், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால், நியாயம் கிடைக்காது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டன.

    குட்கா ஊழல் வழக்கில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

    அதேபோல, மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இந்த வழக்கில் ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல், வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு குட்கா குடோன் உரிமையாளர் ரூ. 56 லட்சம் லஞ்சம் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக அப்போதைய முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழக டி.ஜி.பி. எழுதிய ரகசிய கடிதம், சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


    மனுதாரர் ஜெ.அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், ‘குட்கா ஊழல் தொடர்பான இந்த வழக்கு 4 மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. இதில் அமைச்சர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்படி நேர்மையாக விசாரணை நடத்த முடியும்? ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.

    ஆகவே ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரித்தால் மட்டும் தான் உண்மை வெளியே வரும்’ என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி 30-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

    அப்போது குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை என்பது சமுதாயத்துக்கு எதிரான குற்றமாகும். இந்த குற்றச்சாட்டில், மத்திய, மாநில உயர் அதிகாரிகள் பலரின் தொடர்பு உள்ளது.

    இந்த அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தோ, இந்த அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஒரு கருத்துக்களையோ நாங்கள் பதிவு செய்ய விரும்பவில்லை.

    ஆனால், சமுதாயத்துக்கு எதிரான குற்றம் என்பதாலும், இதில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் பங்கு உள்ளது என்பதாலும், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது.

    இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தால் தான் அது சரியாக இருக்கும். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். #GutkhaScam #GutkhaCBIProbe
    Next Story
    ×