search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி வழக்கு: பெண் சூப்பிரண்டு- கவர்னர் நியமித்த அதிகாரி விசாரணையை தொடங்கினர்
    X

    நிர்மலாதேவி வழக்கு: பெண் சூப்பிரண்டு- கவர்னர் நியமித்த அதிகாரி விசாரணையை தொடங்கினர்

    மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் சூப்பிரண்டு மற்றும் கவர்னரால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆகியோர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று அதிரடி விசாரணை தொடங்கினார்கள்.

    பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஏற்கனவே விசாரித்த அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில், மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரியை சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

    பேராசிரியை நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்கு மூலம், அவரிடம் கைப்பற்றப்பட்ட 3 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் மற்றும் மாணவிகளிடம் பேசும் செல்போன் பேச்சுப்பதிவு ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

    ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அருப்புக்கோட்டை சென்றனர். பேராசிரியை நிர்மலாதேவி வீட்டை பார்வையிட்டனர். பின்னர் மதுரை வந்தனர்.

    இன்று காலை மீண்டும் அருப்புக்கோட்டை சென்ற அவர்கள் தேவாங்கர் கல்லூரி செயலாளர் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். பேராசிரியை நிர்மலா தேவி அதே கல்லூரியில் படித்து அங்கேயே வேலை பார்ப்பதால் அவருடன் நெருக்கமாக இருந்தது யார்? வேறு யாருக்காவது இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பதிவுகளை ஆராய சைபர் கிரைம் போலீசாரின் உதவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடியுள்ளனர். பேராசிரியை தற்போது தான் முதன் முதலில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது ஏற்கனவே இது போல வேறு மாணவிகள் யாரையும் அழைத்தாரா என்பன போன்ற தகவல்களை அவரது செல்போனில் இருந்து அறிய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


    பேராசிரியை மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை போல மேலும் சில பேராசிரியர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேராசிரியை நிர்மலா தேவியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளனர்.

    மாணவிகளிடம் பேராசிரியை பேசிய ஆடியோவில் உங்கள் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்பட்டு விடும் என்று கூறுகிறார். எனவே இதற்கு முன்பு பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் யாருக்காவது வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளாரா? என்பதை கண்டறிய இது அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.

    பேராசிரியை நிர்மலா தேவிக்கு கவர்னர் மட்டத்தில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளதால் உயர் மட்ட அதிகாரிகள் பலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அருப்புக்கோட்டை கல்லூரியில் விசாரணையை முடித்து விட்டு காமராஜர் பல்கலைக் கழகத்திற்கும் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    பேராசிரியையுடன் தொடர்பு வைத்தவர்கள் யார்? அவர்களது தூண்டுதலின் பேரில் தான் அவர் இப்படி செயல்பட்டாரா? என விசாரணை நடத்த உள்ளனர். சிறையில் இருக்கும் நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளை பேராசிரியை நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த மாணவிகளின் பெற்றோர் சந்தித்தனர். அப்போது மாணவிகளிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.

    இந்த நிலையில் நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் விசாரணையை தொடங்கியுள்ளார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை சென்ற அவர் மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்து பேராசிரியை நிர்மலாதேவி 4 மாணவிகளிடம் பேசிய ஆடியோ பதிவை ஆய்வு செய்தார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணையில் எந்த முரண்பாடும் வராது என்றும் சம்பவத்திற்கான காரணம், பின்னணி உள்ளிட்டவைகள் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியை இன்றே சந்தித்து விசாரணை நடத்தவும் சந்தானம் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் சந்தானம் தனது முதல் கட்ட விசாரணையை தொடங்குகிறார்.

    துணைவேந்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அவர் அருப்புக்கோட்டைக்கு செல்ல உள்ளார். அங்கு தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பாலியலுக்கு அழைக்கப்பட்ட மாணவிகளிடம் அவர் விசாரணை நடத்த உள்ளார். அவர் தன்னுடன் விசாரணைக்கு உதவியாக பெண் அதிகாரி ஒருவரையும் உடன் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

    சுமார் 5 நாட்கள் மதுரையில் தங்கும் சந்தானம் 2 வாரத்தில் நிர்மலாதேவி தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே 30-ந்தேதிக்குள் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவர் அறிக்கையை தாக்கல் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×