search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்
    X

    தஞ்சை அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

    தஞ்சை அருகே இன்று காலை காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பெரியார் நகர், பார்வதி நகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த 1 மாத காலமாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இது குறித்து பலமுறை ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் திடீரென அப்பகுதி மக்கள் தஞ்சை - ஊரணி புரம் செல்லும் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தமிழ் பல்கலைக் கழக போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரிய நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இந்த பகுதிகளுக்கு குடிநீர் விரைவாக கிடைக்கும் வகையில் நாளை ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×