search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது
    X

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரண்மனை பகுதியைச் சேர்ந்தவர் வீரபாகு (வயது 44). ஆட்டோ டிரைவர். நகர பா.ஜ.க. முன்னாள் தலைவரான இவர் தற்போது மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு பகுதியில் சவாரி இறக்கி விட்டு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒருவர் பேராவூர் வரை சவாரி செல்ல வேண்டும் என வீரபாகுவிடம் வாடகை பேசியுள்ளார். இதையடுத்து அந்த நபரை ஏற்றிக்கொண்டு தேவிபட்டினம் சாலையில் ஆட்டோ சென்றபோது இருளில் நின்ற 2 பேர் முகத்தை கருப்பு துணியால் மூடியவாறு ஏறினர். சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரபாகுவை சரமாரியாக வெட்டினர்.

    இதில் படுகாயமடைந்து ரத்த காயங்களுடன் நிலைகுலைந்த அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி அந்த வழியாக வந்த டவுன் பஸ்சில் ஏறி ராமநாதபுரம் டவுன் போலீசில் தஞ்சமடைந்தார்.

    போலீசார் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல்சிகிச்சைக்காக வீரபாகு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீரபாகு தெரிவித்த அடையாளங்கள் அடிப்படையில் எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை, டி.எஸ்.பி., நடராஜன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடினர்.

    இதில் கேணிக்கரையைச் சேர்ந்த சம்சுதீன் (28), சின்னக்கடை மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முக்தார் அலி (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசாரிடம் கூறும் போது, சில மாதங்களாக வீரபாகு தனது ஆட்டோவில் பா.ஜ.க. தொடர்பான பிரசாரங்கள் அதிகளவில் செய்து வந்தார். அவர் மீது எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் வீரபாகுவை தாக்கினோம்’ என்றனர்.

    இவர்கள் கொடுத்த தகவல்படி தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலருக்கு மிரட்டல் உள்ளநிலையில் மாநில துணைத்தலைவர் குப்புராமு, மாவட்ட தலைவர் முரளிதரன், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர விழா நடந்து வரும்வேளையில் பா.ஜ.க. பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவத்தால் நகரில் நேற்று இரவு முதல் பதற்றம் நிலவுகிறது. இதனால் நகரின் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×