search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
    X

    கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

    கூட்டுறவு சங்க தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கலின் போது ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 26-ந்தேதி தொடங்கியது.

    பல இடங்களில் ஆளும்கட்சியினரிடம் இருந்து மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படுவதாகவும், எதிர்கட்சியினரின் வேட்பு மனுக்களை அதிகாரிகள் பெற மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தநிலையில் வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்பட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். ஆளும்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அதிகாரிகள் துணையாக இருந்தனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏதாவது ஒரு காரணத்தை கூறி அதிகாரிகள் பெற மறுத்தனர்.

    இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். அனைவரது வேட்பு மனுக்களையும் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் ஏப்ரல் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. #Tamilnews
    Next Story
    ×