search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை வனபகுதியாக மாற்றக்கூடாது- ஜி.கே.வாசன்
    X

    மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை வனபகுதியாக மாற்றக்கூடாது- ஜி.கே.வாசன்

    நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை வனப்பகுதியாக மாற்றக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #gkvasan #manjolaitea

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மணி முத்தாறு அணைக்கட்டின் மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளது.

    1829-ல் பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த ஜமீன்களிடம் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அனுமதியைப் பெற்று தேயிலை பயிர் செய்து வருகிறது. 1950-ல் நாடு குடியரசு பெற்றவுடன் அந்த நிலப்பரப்பு ஜமீன்களிடம் இருந்து அரசு வசம் வந்தது. அதன்பிறகு தமிழக அரசு மாஞ்சோலை பகுதியை அரசு பதிவு செய்யப்பட்ட வனப் பகுதியாக மாற்றுவதற்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    அந்த வழக்கின் முடிவானது பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. எனவே தமிழக அரசு இந்த வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இப்பகுதி வாழ் ஏழை மக்களுக்கு நிரந்த வருமானம் கிடைப்பதற்கும் இந்த நிறுவனம் வழி வகை செய்திருக்கிறது. குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு இந்நிறுவனம் பேருதவியாக இருக்கிறது.

    இப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு, பாபநாச அணைக்கட்டுகளுக்கு தண்ணீர் வருவதற்கும், கோதையாறு இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதற்கும் இந்த நிறுவனத்தால் எந்த இடையூறும் இல்லை எனவும் தெரிகிறது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை வனப்பகுதியாக மாற்றாமல், இந்நிறுவனத்தில் பணிபுரிய அதிக எண்ணிக்கையிலான தமிழக மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவும், இந்நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படவும், பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews #gkvasan #manjolaitea 

    Next Story
    ×