search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரி உயர்வை எதிர்த்து புதுவையில் வியாபாரிகள் கடையடைப்பு
    X

    வரி உயர்வை எதிர்த்து புதுவையில் வியாபாரிகள் கடையடைப்பு

    வரி உயர்வை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.
    புதுச்சேரி:

    தொழில் வரி, வணிக வளாக வரி, வணிக உரிமை கட்டணம் ஆகியவற்றை புதுவை அரசு உயர்த்தி உள்ளது. அதோடு குடிநீர், மின்சாரம், சொத்து ஆகியவற்றுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் புதிதாக குப்பை அள்ளுவதற்கு நகராட்சிகள் சார்பில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

    வரி உயர்வு மற்றும் புதிய வரி விதிப்புக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் வணிகர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும் வரி உயர்வை கைவிடக்கோரி புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) 24 மணி நேரம் கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் கடை அடைப்பு போராட்டம் தொடங்கியது.

    போராட்டத்தினால் புதுவையின் பிரதான சாலைகளான நேரு வீதி, காமராஜர் சாலை, காந்தி வீதி, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, 100 அடி ரோடு, மி‌ஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதே போல் பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை மார்க்கெட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அதோடு பிரதான சாலைகளில் இயங்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடிக் கிடந்தன.

    வணிகர்கள் போராட்டத்துக்கு சினிமா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கடை அடைப்பு போராட்டத்தால் புதுவை சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சாடி கிடந்தன.

    நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள சிறிய டீக்கடை, பெட்டிக் கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகள் கூட மூடிக்கிடந்ததால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல் புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்திலும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. அங்கும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தது.

    அதே நேரத்தில் புதுவை வர்த்தக சபை, புதுவை தொழில் வர்த்தக சங்கங்களின் பேரமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என அறிவித்து இருந்தனர்.

    மேலும் கடைகளை திறக்க விரும்பும் வியாபாரிகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதனால் பிரதான சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    புதுவை நகரம் முழுவதும் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்றனர்.
    Next Story
    ×