search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் 3 மணி நேரம் விவேக் வாக்குமூலம்
    X

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் 3 மணி நேரம் விவேக் வாக்குமூலம்

    ஜெயலலிதா மரணம் குறித்து இளவரசி மகன் விவேக் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். #JayalalithaDeath
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவிடம் ஏற்கனவே ஆணையம் விசாரணை நடத்தியது. இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் (ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி) ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.

    ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் இளவரசியும் தங்கி இருந்தார். அப்போது, விவேக்கிடம் ஜெயலலிதா மிகவும் பாசமாக இருந்துள்ளார். இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரம் விவேக்கிற்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் தனது வக்கீல்களுடன் விவேக் ஆஜரானார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவரது உடல்நிலை எப்படி இருந்தது?, அதுகுறித்து உங்களுக்கு தெரியுமா?, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை மருத்துவமனையில் சந்தித்தீர்களா?, ஜெயலலிதாவை உங்களது தாயார் மருத்துவமனையில் சந்தித்தாரா?, அதுகுறித்து உங்களுக்கு தெரியுமா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார்.

    நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விவேக் பதில் அளித்துள்ளார். காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 3 மணி நேரம் நடந்த விசாரணையின் போது விவேக் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது வெளிநாட்டில் இருந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்றும் விவேக் கூறியதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    விசாரணைக்கு பின்பு, மீண்டும் 28-ந் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அவருக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆணையத்தில் இருந்து வெளியே வந்த விவேக், ‘நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளித்தேன். ஆணையத்தின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் அங்கு தெரிவித்ததை தற்போது வெளியில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது’ என்றார்.

    விவேக் ஆணையத்துக்கு வருவதை அறிந்து, அவரது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆணையத்துக்கு வந்திருந்தனர். விவேக் ஆணையத்தில் ஆஜராகி விட்டு வெளியே வரும் வரை அவர்கள் ஆணைய அலுவலகத்தின் வாசலில் காத்திருந்தனர். ஆணையத்தில் இருந்து விவேக் புறப்பட்டு சென்ற பின்னர், அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்றனர்.

    ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த 5 டாக்டர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழுவில் அரசு மருத்துவர் பாலாஜி இடம் பெற்று இருந்தார். திருப்பரங்குன்றம் உள்பட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது தேர்தல் படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. தனது முன்னிலையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக மருத்துவர் பாலாஜி சான்றொப்பம் அளித்துள்ளார். ஏற்கனவே 2 முறை இவர் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்ததாக இவர் ஏற்கனவே ஆணையத்தில் கூறி உள்ளார். இந்த நிலையில் 3-வது முறையாக ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆஜராகிறார்.  #Vivek #Jayalalithaa #JayalalithaDeath #tamilnews
    Next Story
    ×