search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேகர் ரெட்டியிடம் லஞ்சம்: 50 அதிகாரிகள் சிக்குகிறார்கள்
    X

    சேகர் ரெட்டியிடம் லஞ்சம்: 50 அதிகாரிகள் சிக்குகிறார்கள்

    சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை அனுப்பி இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    சென்னை:

    பொதுப்பணித்துறையில் காண்டிராக்டராக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதிய ரூபாய் நோட்டு கிடைக்காமல் மக்கள் திண்டாடிய நேரத்தில் சேகர்ரெட்டி வீட்டில் ரூ. 34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் சிக்கியது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேகர் ரெட்டி அவருக்கு உதவிய சீனிவாச ரெட்டி, ஆடிட்டர் பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன், அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி, பரஸ்மால் லோதா ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சேகர்ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். அதில் ஒரு டைரி முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. அதில் அரசின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கமி‌ஷன் கொடுக்கப்பட்டது என்ற விபரம் உள்ளதாக கூறப்படுகிறது.

    சுமார் ரூ. 300 கோடி வரை கமி‌ஷனாக லஞ்சம் கொடுத்துள்ளார்.

    கையில் கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றை பற்றியும் ரகசிய விசாரணைகள் நடத்தி தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த விசாரணை விபரங்களை அறிக்கையாக தயாரித்துள்ளார்கள்.

    தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்கவும் லஞ்சம் வாங்கி கொண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட பல துறைகளை சேர்ந்த 50 அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அவர்களது பெயர், விவரங்கள் மற்றும் எவ்வளவு லஞ்சப் பணம் கைமாறியது என்ற விபரங்களையும் வருமான வரித்துறையினர் சேகரித்துள்ளார்கள்.

    லஞ்சம் வாங்கியவர்களின் பெயர் பட்டியல், லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அதோடு சேகர்ரெட்டி மற்றும் பான்மசாலா தயாரிப்பு நிர்வாகிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்ற துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற பரிந்துரை கடிதத்தையும் அனுப்பி இருக்கிறார்கள்.

    வருமான வரித்துறை அனுப்பி இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. இதனால் அரசு மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×