search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களே வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கையின் வெற்றி...
    X

    மாணவர்களே வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கையின் வெற்றி...

    தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம்.
    இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு முடிவு, மூன்று இளம் சாதனையாளர்களை, தம் வாழ்க்கையின் முடிவுக்குத் தள்ளி இருக்கிறது. மிகுந்த மன அதிர்ச்சி, மன வலியைத் தந்துள்ள, இந்தச் சோக நிகழ்வுகளுக்கு, ‘நீட்’ தேர்வு மட்டும்தான் காரணமா...?

    மன்னிக்கவும் ஏதோ ஒரு வகையில் நம் எல்லாருக்குமே இதில் பங்கு இருக்கிறது. பொதுத்தேர்வு அல்லது போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதை, உலக மகா சாதனையாக உருவகப்படுத்தியது.. இதுவன்றி வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்கிற மாயத் தோற்றத்தைப் பதிவு செய்தது... ‘உலகம் உந்தன் கையிலே; வானம் உந்தன் பையிலே’ என்று சினிமா வசனம் பேசி, பொய்யான நம்பிக்கையை விதைத்தது...

    வழிமுறைகளைச் சொல்லித் தயாரிப்பதை விடுத்து, வெறுமனே அறிவுரைகளை மட்டுமே வழங்கி, இளைய மனங்களைத் தனியே தவிக்கவிட்டது... யார் செய்த தவறு..?

    தேர்வு நோக்கிய, நம்முடைய பொதுவான அணுகுமுறை அத்தனை சரியானதாக இல்லை. போருக்குப் போகிற வீரனைப் போல, அபாயகரமான அறுவை சிகிச்சைக்குச் செல்கிற நோயாளியைப் போல, சிறுவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்கிற போக்கு உடனடியாக மாறியாக வேண்டும். மணமேடைக்கு வருவதற்கு முன்னால், மணமகன், மணமகளைத் தயார் செய்கிறபோது, சுற்றிலும் எத்தனை மகிழ்ச்சியான சூழல் நிலவும்..? இதே போன்றுதான், எந்தத் தேர்வுக்கான தயாரிப்பும் இருத்தல் வேண்டும். மாறாக, அடிப்படையற்ற அச்சம், தேவையற்ற பதற்றம் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்.

    அளவுக்கு அதிகமான மிகப் பெரிய முக்கியத்துவம் தந்து, ஒவ்வொரு தேர்வையும், வாழ்க்கையின் அதி முக்கியமான சவாலாக மாற்றி வைத்துவிட்டோம். இதன் விளைவாய், தேர்வில் தோல்வி அடைந்தால், அது தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், மாபெரும் இழுக்கு, தாங்க முடியாத அவமானம் என்று நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம். தேர்வு ஒரு படிக்கட்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் அதில் வேறு ஒன்றும் இல்லை. ஓர் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓர் எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக மாறுகிறபோது, அதனை இயல்பாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் அத்தனை எளிதில் எல்லாருக்கும் வந்துவிடாது. வயதில் மூத்த, பெற்றோருக்கே அது மிகவும் கடினமான சவால்தான்.

    எனில், இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்...? அதிலும், அடிமட்டத்தில், இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலையில் இருந்து, போராடி வெற்றி பெறத் துடிக்கிற பிஞ்சு மனங்களில், ஏமாற்றம் எத்தனை பெரிய சுமையாக, பேரிடியாக இறங்கும்..? இது ஏதோ ஒரு நாள், ஒரு கணத்தில் ஏற்பட்ட வலி, வேதனை அல்ல. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சந்தித்த, எண்ணற்ற வேதனைகளை விட்டு வெளியே வர ஏங்குகிற அப்பாவி உயிர்களின் இதயத் துடிப்பு. வாழ்க்கையின் யதார்த்தம், உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கான மன வலிமை, வேறு யாரையும் விட மிக அதிகமாக, இவர்களுக்குத் தேவை. ஆனால், நாம் என்ன தந்து வருகிறோம்...?

    ஒவ்வொரு முறை ‘பயிலரங்கம்’ சென்று வருகிறபோதும், இளைஞர்கள் கூட்டமாக வந்து கூறுவது இதுதான். எங்களுக்கு தன்னம்பிக்கை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் நிறையவே இருக்கு. நாங்க என்ன படிக்கணும்..? எப்படித் தயார் ஆவணும்..? இப்போ என்ன நடந்துக்கிட்டு இருக்கு...? உண்மையான நிலவரம் என்ன..? எங்களுக்கு இது கிடைக்கிறதுக்கு எவ்வளவு வாய்ப்புகள் இருக்கு....?’

    ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான வழிமுறைகள், செய்முறைகளை விளக்குவோம். அப்படி எதுவும், சொல்ல முடியவில்லையா...? தயவு செய்து விலகி இருப்போம். உன்னால் முடியாதது ஒன்றுமே இல்லை என்று சொல்லி, உசுப்பேற்றி விடுகிற நற்பணியை மட்டும் யாரும் செய்யாமல் இருப்போம். வெற்றி பெறுவதற்கு, கட்டாயம் எல்லாரும் உழைக்க வேண்டி இருக்கிறது. சிலர், இன்னும் அதிகமாகவே பாடுபட வேண்டி உள்ளது. அதற்கான உடல், மன வலிமையை அவர்களுக்குத் தருவது எது...? வெற்று வார்த்தைகள் அல்ல.

    களத்தில் அவர்களோடு நின்று நாம் அளிக்கும் ஒத்துழைப்பு; அவர்களின் முயற்சிக்கு நாம் தரும் பங்களிப்பு. பத்து பேர், நூறு பேர் சேர்ந்து ஒரே ஒரு தேர்வருக்கு நேர்மையாக உதவி செய்தால் கூடப் போதும். அதை விடுத்து, ஆயிரம் பேர் நடுவே நின்றுகொண்டு, எழுச்சியுரை ஆற்றி, கைத்தட்டல் வாங்குவதால், இளைஞர்களுக்கு என்ன பயன்...?

    வைஸ்யா, ரிதுஸ்ரீ, மோனிஷா ஆகியோர் எடுத்த விபரீத முடிவுகளின் பின்னால், இந்தச் சமுதாயம் அவர்கள் மீது ஏற்றி வைத்த, ‘அபார வெற்றி, அல்லது அவமானகரமான தோல்வி’ தந்த அழுத்தம் மிக முக்கிய காரணம். ஒரு தேர்வு, அதன் முடிவு ஆகியன கல்வித்துறையை தாண்டி, பெற்றோர், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், அரசியல் வடிவம் பெறுவது நல்லதற்கு அல்ல. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது மிக அவசரம், அவசியம். தவறான கற்பித்தல்கள், தரமற்ற வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை எனும் பெயரில் புகட்டப்படும் செயற்கை இலக்குகள்... இளைய தலைமுறையை, கண நேர வெளிச்சத்தைக் காட்டி, நிரந்தரமாய் இருட்டுக்குள் தள்ளி விடும்.எச்சரிக்கை.

    யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்; யாரைக் கண்டும் வியக்கவும் வேண்டாம்; யாரையும் ஏளனமாய் நினைக்கவும் வேண்டாம்.

    பழந்தமிழ்ப் பாடல் அழகாய்ச் சொல்கிறது: “பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.

    வெற்றியும் அது தரும் புகழும் இருக்கட்டும்.

    அதனினும் பெரிது, அதனினும் இனிது வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். இந்தச் செய்தி, இளைஞர்களுக்குச் சொல்லப்படுகிறதா...?

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரி அலுவலர்.
    Next Story
    ×