search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை
    X

    கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

    மாசித்திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு சென்ற வண்ணம் உள்ளன.

    கன்னியாகுமரி நடுத்தெருவில் வெள்ளாளர் சமுதாய வகை டிரஸ்டுக்கு சொந்தமான முத்தாரம்மன் கோவில், கன்னியாகுமரி மறக்குடித்தெருவில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில், வடக்குத்தெருவில் உள்ள முருகன் கோவில், கலைஞர் குடியிருப்பு கற்பகவிநாயகர் கோவில் ஆகிய 4 கோவில்களில் மாசித் திருவிழாவையொட்டி காவடி கட்டு விழா நடந்தது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி் காவடிக்கு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து காவடியில் பன்னீர் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் வீதி-வீதியாக மேளதாளத்துடன் பவனியாக கொண்டு சென்றனர்.

    இந்த 4 காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றார்கள். அவர்கள் அஞ்சுகிராமம், கூடங்குளம், உவரி, நவ்வலடி, திசையன்விளை, உடன்குடி, தருவைகுளம் வழியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருச்செந்தூர் சென்று அடைகிறார்கள். 26-ந் தேதி இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 27-ந் தேதி பச்சைசாத்து நிகழ்ச்சி முடிந்து அங்கு இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படுகிறார்கள். இந்த பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.

    கொட்டாரம் ராமநாதபுரத்தில் கற்பக விநாயகர் கோவிலில் மாசி காவடிகட்டு திருவிழா நடந்தது. இதையொட்டி முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு வழிபாடு போன்றவை நடந்தது. இரவு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதி-வீதியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன்பிறகு கொட்டாரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். இதே போல கொட்டாரம் கீழத்தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் மாசி காவடிகட்டு திருவிழா நடந்தது.
    Next Story
    ×