search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி திருவிழா: காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
    X

    கந்தசஷ்டி திருவிழா: காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டப்பட்டது. இதனையடுத்து முருகப் பெருமானின் பிரதிநிதியாக கோவில் முதல் ஸ்தானிகர் வசந்த் பட்டர் தனது கரத்தில் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்.

    பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்கு சுப்பிரமணியன், செல்லப்பா ஆகிய பட்டர்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர். காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப மிளகு, துளசி, பால் மற்றும் ஒரு வேளை சாப்பாடு ஆகிய விரதங்களை கடைபிடித்தனர்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 12-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக முருகப்பெருமானின் தாயாரான கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்திவேலை பெற்று கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மகாநந்தியை வலம் வந்து, சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் சமர்ப்பிக்கப்படுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி மாலை 6 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 14-ந் தேதி காலை கிரிவல பாதையில் சட்டத் தேரோட்டமும், மாலையில் கருவறையில் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்தலும் நடக்கிறது. மேலும் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி செய்யப்படுகிறது. மேலும் கருவறையில் பாவாடை தரிசனம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது. இந்த நடைமுறை திருவிழாக்காலங்களிலும் தொடருகிறது. இதில் கந்தசஷ்டி திருவிழாவில் மட்டும் ஆண்டு தோறும் 6 நாட்கள் திருவாட்சி மண்டபம் மற்றும் வெளி பிரகாரம் மற்றும் கோவிலின் பிரதான முன்வாசல் திறந்தே இருக்கும். காரணம் சஷ்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலிலே தங்கி இருப்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் 6 நாட்கள் தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. இதில் பூஜை செய்யப்பட்ட எந்திர தகட்டை பக்தர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று கூறி சூரசம்ஹாரம் நாளில் ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகம் ஊழியர் கள் பக்தர்களுக்கு அறிவிப்பு செய்வார்கள். யாகசாலையில் பூஜிக்கப்பட்ட எந்திர தகடு மகிமை என்பதால் அதை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்லுவார்கள்.

    கந்த சஷ்டியையொட்டி சண்முகர் சன்னதியில் தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு 6 நாட்களும் தலா 4 மணிநேரம் சண்முகார்ச்சனை நடக்கும். இதை விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய கோவிலுக்குள் 7 இடங்களில் பிரமாண்ட டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தவிர தெய்வம், கந்தன் கருணை, வருவான் வடிவேலன், திருவிளையாடால் உள்ளிட்ட பக்தி சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
    Next Story
    ×