search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை நிறுத்தம்"

    • மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது.

    ஆனாலும் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மெட்ரோ ரெயில் தரப்பில் கூறியதாவது:-

    ஸ்மார்ட் கார்டு விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை வழங்கி வருகிறோம். பொதுப் பயன்பாடு உள்ள அந்த கார்டை ஊக்குவிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம். ஆனால் சில பயணிகளிடம் இது சென்றடையவில்லை. லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டை தூக்கி எறியக்கூடாது என்று பயணிகள் தெரிவித்தனர்.

    • மத்திய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
    • நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் 12 லட்சம் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

    கோவை,

    சிறு, குறு, நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் சந்திரன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சு விலை கேண்டி (356 கிலோ) ஒன்றுக்கு ரூ.58 ஆயிரமாக உள்ளது. சுத்தமான பருத்தி, ஒரு கிலோ ரூ.194 ஆக உள்ளது. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்துக்கான விலை, ஒரு கிலோவுக்கு ரூ.2 ஆக இருக்க வேண்டும். ஆனால், தற்போது பஞ்சிலிருந்து நூல் மாற்றத்துக்கு, ஒரு ரூபாய் மட்டும் தான் கிடைக்கிறது. இதனால் கிலோவுக்கு ரூ.40 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    சுமார் 10 ஆயிரம் கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில், 2500 கிலோ நூல் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. நூற்பாலைகள் பெரும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால், வங்கிக் கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், ஜி.எஸ்.டி., போன்ற செலவினங்களை செலுத்த முடியாமல், ஆலைகள் தத்தளித்து வருகின்றன. இந்த நிலை நீடித்தால் ஆலைகள் நிரந்தரமாக மூடும் அபாய நிலைக்கு தள்ளப்படும். எனவே, நாளை முதல் (ஜூலை 15) நீல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

    தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நூற்பாலைகள் 700 உள்ளன. இங்கு உற்பத்தி நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு, ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் 12 லட்சம் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

    எனவே, மத்திய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு (7.05 சதவீதம்) குறைத்துக் கொடுக்க வேண்டும்

    குறுகிய கால கடன் நிலுவைத் தொகையை மறுசீரமைத்து, மீண்டும் புதிய கடனாக வழங்கி, அதனை திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். ஜவுளித்துறையின் மூலப்பொருளான பருத்தி விளைச்சலை நாட்டில் அதிகரிக்க வேண்டும். மேலும், மின் கட்டண உயர்வால் மற்ற மாநிலங்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.எனவே, மாநில அரசானது உயர்த்திய மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×