search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குகள் தேக்கம்"

    • உலகிலேயே, இந்தியாவில் தான் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • இந்தியாவில் வழக்குகள் அதிகமாக இருப்பதற்கு மக்கள் தொகை மட்டுமல்லாமல், நீதி கிடைப்பதற்கான தாமதமும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    நமது நாட்டில் ஜனநாயகத்தை பேணி காப்பதில் கோர்ட்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை அதிகாரம் மிக்கவர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் உரிமையை நிலைநாட்டுகின்றன. கோர்ட்டு என்பது வெறும் 2 தரப்பினரின் பிரச்சனைகளை தீர்க்கும் இடம் மட்டும் அல்ல.

    அது சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தி, மக்களை பாதுகாத்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் இடமாகவும் உள்ளது. இந்தியாவில் தாலுகா, மாவட்டம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என 4 வகையான கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றும், தங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டு, வழக்குகளை தீர்த்து வருகின்றன. தாலுகா கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புக்கு எதிராக மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என ஒவ்வொரு நிலைக்கும் நாம் செல்லலாம்

    கோர்ட்டுகளில் தலைமை அமைப்பாக சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் மட்டுமே உள்ளது. ஆனால் நாடு முழுவதும் வழக்குகளை கையாள 25 ஐகோர்ட்டுகள், 688 மாவட்ட கோர்ட்டுகள், 5,650 தாலுகா கோர்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. உலகிலேயே, இந்தியாவில் தான் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீனா, பிரேசில் உள்பட பெரிய நாடுகளைத் தவிர்த்து உலகில் உள்ள நாடுகளின் வழக்குகளையும் மொத்தமாக சேர்த்தால் கூட இந்தியாவில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை முந்த முடியாது. இந்தியாவில் வழக்குகள் அதிகமாக இருப்பதற்கு மக்கள் தொகை மட்டுமல்லாமல், நீதி கிடைப்பதற்கான தாமதமும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    நமது நாட்டில் உள்ள தாலுகா, மாவட்டம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் மொத்தம் 5 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 227 வழக்குகள் உள்ளன. அதில் மிக அதிகபட்சமாக தாலுகா மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் மட்டும் 4 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரத்து 945 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகள், சிவில் மற்றும் கிரிமினல் என பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. சிவில் வழக்குகள் என்பவை உரிமையை நிலை நாட்டும் வகையிலும், கிரிமினல் வழக்குகள் என்பவை கொலை, கொள்ளை போன்ற போலீஸ் வழக்குகளின்படி விசாரணை செய்யப்படுகின்றன.

    நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 62 ஆயிரத்து 925 சிவில் வழக்குகளும், 17 ஆயிரத்து 296 கிரிமினல் வழக்குகளும் என மொத்தம் 80 ஆயிரத்து 221 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ஐகோர்ட்டில் 44 லட்சத்து 37 ஆயிரத்து 880 சிவில் வழக்குகளும், 17 லட்சத்து 62 ஆயிரத்து 181 கிரிமினல் வழக்குகளும் என மொத்தம் 62 லட்சத்து 61 வழக்குகளும் தேக்கம் அடைந்துள்ளன.

    மாவட்ட மற்றும் தாலுகா கோர்ட்டுகளில், 1 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 341 சிவில் வழக்குகளும், 3 கோடியே 37 லட்சத்து 73 ஆயிரத்து 604 கிரிமினல் வழக்குகளும் என மொத்தம் 4 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரத்து 945 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 558 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் சிவில் வழக்குகள் 33 ஆயிரத்து 467 ஆகும். 77 ஆயிரத்து 91 கிரிமினல் வழக்குகள் ஆகும்.

    ×