search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் துறையினர்"

    • கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் தலைமையிலான அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ.,எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், மனோஜ் முனியப்பனை சஸ்பெண்டு செய்தார். இதனால் வருவாய்துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரியின் சஸ்பெண்டை ரத்து செய்து உடனடியாக மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும், தமிழக அரசு இதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில்:-

    கள்ளக்குறிச்சி ஆதிதிரா விடர் நலத்துறை தாசில்தார் மனோஜ் முனியப்பன் பணியிடை நீக்கத்தினை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று பணியை புறக்கணித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மனோஜ் முனியப்பனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சிக்கு போராட சென்ற வருவாய் துறை ஊழியர்களை போலீசார் கைது செய்து இன்று காலை தான் விடுவித்தனர்.

    இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மனோஜ் முனியப்பனை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டம் தொடரும். இதில் எந்த சமரசத்திற்கும் உடன்பாடு இல்லை. வருவாய் துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் முழு நேரமும் பணியாற்றி வருகிறோம்.

    ஒவ்வொரு புதிய திட்டங்களுக்கும் புதியதாக ஆட்கள் நியமிக்காமல் பணியில் இருப்பவர்களே செய்து வருகிறோம்.இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்படி பணி செய்யும் மனோஜ் முனியப்பனை எந்த விசாரணையும் செய்யாமல் பணி இடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.

    மாவட்டம் முழுவதும் இருந்து வருவாய் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலக பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 650-க்கும் மேற்பட்ட தாசில்தார் அலுவலக பணியாளர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் கிராம உதவியாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், உள்பட வருவாய்த்துறை பல்வேறு பணிகள் இந்த போராட்டத்தால் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×