search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகவரி"

    • 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
    • அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    இதில் ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரி விதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல் முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 அலுவலகங் களுக்கு ஈரோட்டில் அலுவலகக் கட்டிடம், சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டி யில், 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

    சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஒளிவருடல் செய்யப் பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் 31 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

    மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக பெறும் சேவையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

    இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள மூன்று இணையநெறிமுறை புகைப்படக்கருவிகளுடன், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணைய நெறி முறை புகைப்படக் கருவிகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர்,ஜூலை.23-

    தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வணிக வரித்துறை இணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி பவ்யா தனிரு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமலாக்க பிரிவு இணை கமிஷனர் (பொறுப்பு) ரமாதேவி, வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார், வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள், ஆடிட்டர்கள் பங்கேற்றனர்.

    3 வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 1ல், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்திநகர், பொங்கலூர், திருப்பூர் வடக்கு - 1, திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் ரூரல் - 1, திருப்பூர் ரூரல் 2 சரகங்கள் உள்ளன.

    வணிக வரி மாவட்டம் 2 ல், திருப்பூர் தெற்கு, திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் - 1, சென்ட்ரல் 2, கொங்குநகர், லட்சுமி நகர்.வேறு மாவட்டத்திலிருந்த திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு, புதிதாக திருப்பூர் வணிக வரி மாவட்டம் - 3 உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 3 ல், தாராபுரம், காங்கயம், பல்லடம் - 1, பல்லடம் - 2, வெள்ளகோவில், உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் வணிக வரி கோட்டத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர விரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வணிக வரி கோட்டம் உதயமாகியுள்ளதால் திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், வரி பயிற்சியாளர், ஆடிட்டர்கள், ஈரோடு, கோவை என வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை இனி ஏற்படாது.

    • வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
    • லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் குணசேகர். இவரிடம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி தஞ்சை வணிக வரி அலுவலர்கள் 6 பேர் விசாரணை நடத்தினர்.

    அப்போது உங்கள் மீது புகார் வந்துள்ளது. வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் குணசேகரிடம் அலுவலர்கள் கூறினர்.

    லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி போடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கனவே இறந்துவிட்டார்.

    ×