search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன் கோவில்"

    • மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    • அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    • மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா அன்று சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், பெரிய சப்பரம் போன்ற தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர்.

    இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச் சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 16-ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மார்கழி 1-ந் தேதி தொடங்குவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    அஷ்டமி திருவிழா நடைபெற உள்ளதால் சப்பரம் உலா வரும் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் மகா ருத்ராபிஷேக உற்சவ நிகழ்ச்சி 12-ந் தேதி நடக்கிறது.
    • வாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாருத்ராபிஷேக உற்சவம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுக்ஞை, புண்யாஹவாசனம், விக்னேசுவரபூஜை, பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, மஹன்யாசம், ருத்ரம், சமக பாராயணம், ருத்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை விக்னேசுவர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, அஸ்த்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். பக்தர்கள் ருத்ராபிஷேகத்துக்காக பால், தயிர் மற்றும் சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணை ஆகியவற்றை கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×