search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசிமக திருவிழா"

    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • ஓலைச்சப்பர வீதி உலா1-ந் தேதி நடக்கிறது.

    இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்று கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் ஆகும். கும்பகோணம் காசிவிஸ்வநாதர் ேகாவில் அருகே இந்த குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனிதநீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள்.

    6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும், 21 தீர்த்தக்கிணறுகளும் உள்ளன.

    மாசி மகத்தையொட்டி மகாமக குளத்தை சுற்றி உள்ள சைவ, வைணவ தலங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சைவ தலங்களில் (சிவன் கோவில்களில்) நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வைணவ தலங்களில் (பெருமாள் கோவில்களில்) நேற்று கொடியேற்றப்பட்டது. சக்கரபாணி பெருமாள் கோவில், ராஜகோபாலசாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோவில்களில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி, அந்தந்த கோவில்களில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் நடைபெற்ற கொடியேற்றத்தின் போது சுதர்சனவல்லி, விஜயவல்லித் தாயார்களுடன் சக்கரபாணி பெருமாள் கொடிமரத்தின் அருகில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சக்கரபாணி சுதர்சன கமிட்டி உறுப்பினர்களும், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகளும் செய்து இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஓலைச்சப்பர வீதி உலா வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 6-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் தேரோட்டமும் நடக்கிறது. மாலையில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    ராஜகோபாலசாமி கோவிலில் வருகிற 6-ந் தேதி தேரோட்டமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. அதேபோல ஆதிவராகப்பெருமாள் கோவிலில் வரும் 6-ந் தேதி தேரோட்டமும், கோவிலின் பின்புறமுள்ள வராகக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • தேரோட்டம் வருகிற 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
    • மாசி மக தீர்த்தவாரி மகாமக குளத்தில் 6-ந் தேதி நடக்கிறது.

    கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இங்கு மந்திர பீடேஸ்வரி என அழைக்கப்படும் மங்களாம்பிகை அம்பாள் உடனாகிய ஆதிகும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    உலகில் முதன் முதலில் தோன்றிய கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உடைய ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்றது. இதேபோல் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவும், மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 28-ந் தேதி அறுபத்து மூவர் விழாவும், 1-ந் தேதி தன்னைத்தான் பூஜித்தல் மற்றும் ஓலை சப்பரம் வீதியுலாக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டம் வருகிற 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி மகாமக குளத்தில் 6-ந் தேதி நடக்கிறது.

    தொடர்ந்து 8-ந் தேதி விடையாற்றி உற்சவமும் 9-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் சுத்தாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகிறார்கள்.

    • மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மார்ச் 8-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.

    வேதாரண்யத்தில் பிரசித்திப்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோவிலில், வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது. 64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரரும், வேதநாயகி அம்பாளாகவும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அளித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டாரசன்னதி, கோவில் நிர்வாக அலுவலர் அறிவழகன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் நிகழ்ச்சி வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம், 8-ந் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.

    • தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
    • மாசிமக விழா தீர்த்தவாரி மார்ச் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் கண்ணன் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணத்தில் மாசிமக விழா தீர்த்தவாரி வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பகோணத்திற்கு வந்து மகாமக குளம் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். மேலும் பலர் மகாமக குளம் பகுதியில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கும்பகோணம் மகாமக குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்க அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

    தற்போது கொரோனா அச்சம் நீங்கியுள்ள நிலையில் ஆகம விதிகளின்படி மகாமக குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பங்குனி மாதம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா மகாமக குளத்தில் நடைபெறுவது வழக்கம். திருவிழாவுக்கு ஒரு மாத கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில் மகாமக குளத்தில் தற்போது நிரம்பியுள்ள தண்ணீரை வெளியேற்றினால் தெப்ப திருவிழாவுக்கு குளத்தில் போதிய தண்ணீர் இருக்காது. எனவே தற்போது மகாமக குளத்தில் நிரம்பி உள்ள தண்ணீரை வெளியேற்ற கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்ச் 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடக்கிறது.
    • மார்ச் 6-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    முன்பு ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்ட பிறகு இறைவன் மண்ணையும், அமுதத்தையும் கொண்டு உருவாக்கிய லிங்கத்திற்கு பூஜைகள் செய்து கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரராக ஐக்கியமானதாக தல வரலாறு கூறுகிறது.

    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். மங்களாம்பிகை அம்மன் 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை சேர்த்து 72ஆயிரம் கோடி சக்திகளையும் உடையவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இக்கோவில் மகாப்பிரளயத்திற்கு பிறகு உலகில் தோன்றிய முதல் தலமாக கருதப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமாகவும், ஆண்டுதோறும் நடைபெறுவது மாசி மக விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசிமக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி விநாயகர், முருகன், சாமி, அம்பாள் ஆகிய 4 தேரோட்டமும், 5-ந் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், 6-ந் தேதி மகா மககுளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமமும், கணபதி பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 2 பந்தக்காலுக்கு 16 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் வளாகம் மற்றும் விநாயகர் தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இந்த விழாவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மார்ச் 16-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
    • 25-ந்தேதி சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதில் மாசி திருவிழா தான் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகன், முதல் மூவர், சந்திரேசகர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும்.

    இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழாவின் கொடியேற்றம் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்தின் அருகே யாகசாலை வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அதைதொடர்ந்து காப்பு கட்டிய பட்டர் கொடிமரத்திற்கு பூஜை செய்தார்.

    அதைதொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரால் கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து காலை 9.20 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கும், மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகர் சுவாமிகள் காலை, மாலையில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வருவர். அதை தொடர்ந்து வருகிற 25-ந் தேதி காலை சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றியுள்ள கொடிமரத்திற்கு சுற்றுக்கோவில் கொடியேற்றம் நடைபெறும்.

    அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதை தொடர்ந்து அடுத்த மாதம் 16-ந் தேதி பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெறும் திருவிழா நிறைவு பெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • இந்த விழா வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்தது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அகத்தியரை பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமான் அகத்தியருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக வேதாரண்யம் வந்து அவருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.

    இந்த ஐதீக நிகழ்ச்சி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சப்தமி திதி அன்று உச்சி காலத்தில் திருமண கோலத்தில் அகத்தியமுனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழா நடைபெறுகிறது.

    ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா மற்றும் தேரோட்டத்திற்காக அகத்தியமுனிவரை அழைப்பதற்காக மாட்டுப் பொங்கல் அன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று அகத்தியர் கோவில்ல் உள்ள அகத்தியருக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் நடந்தது.

    ×