search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பகோணம் வைணவ கோவில்களில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X
    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சக்கரபாணி பெருமாள். கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    கும்பகோணம் வைணவ கோவில்களில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • ஓலைச்சப்பர வீதி உலா1-ந் தேதி நடக்கிறது.

    இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்று கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் ஆகும். கும்பகோணம் காசிவிஸ்வநாதர் ேகாவில் அருகே இந்த குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனிதநீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள்.

    6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும், 21 தீர்த்தக்கிணறுகளும் உள்ளன.

    மாசி மகத்தையொட்டி மகாமக குளத்தை சுற்றி உள்ள சைவ, வைணவ தலங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சைவ தலங்களில் (சிவன் கோவில்களில்) நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வைணவ தலங்களில் (பெருமாள் கோவில்களில்) நேற்று கொடியேற்றப்பட்டது. சக்கரபாணி பெருமாள் கோவில், ராஜகோபாலசாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோவில்களில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி, அந்தந்த கோவில்களில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் நடைபெற்ற கொடியேற்றத்தின் போது சுதர்சனவல்லி, விஜயவல்லித் தாயார்களுடன் சக்கரபாணி பெருமாள் கொடிமரத்தின் அருகில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சக்கரபாணி சுதர்சன கமிட்டி உறுப்பினர்களும், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகளும் செய்து இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஓலைச்சப்பர வீதி உலா வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 6-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் தேரோட்டமும் நடக்கிறது. மாலையில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    ராஜகோபாலசாமி கோவிலில் வருகிற 6-ந் தேதி தேரோட்டமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. அதேபோல ஆதிவராகப்பெருமாள் கோவிலில் வரும் 6-ந் தேதி தேரோட்டமும், கோவிலின் பின்புறமுள்ள வராகக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×