search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • விழுப்புரம் பஸ் நிலையத்தில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருட்களான குட்கா, கஞ்சா, பான் மசாலா போன்ற பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தொடர் போதை பொருள் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தத் தொடர் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் பல்வேறு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு போலீஸ் டி .எஸ். பி ரவி, மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ ,ரவுடிகள் கண்காணிப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்ட் மற்றும் இவர்களது தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும்படி இருந்த 2 நபரை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா கஞ்சா போன்ற போதை பொருள்கள் கடத்துவது தெரிவ வந்தது. மேலும் இவர்கள் விழுப்புரம் கண்டாச்சிபுரம் கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (28) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தநாடு அருகே மட்டிகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் (26) இவர்கள் மினி லாரி டிரைவர் மற்றும் மீன் விற்பனையும் மோட்டார் சைக்கிளில் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் இந்த போதைப் பொருள்களை வியாபார ரீதியாக சென்னையில் இருந்து நண்பர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×