search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மரணம்"

    • உறவினர் ஒருவர், ரமேஷின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • 3 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சியில் கருத்தானூர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் ரமேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மகாநதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்கள் இருவரும் சக்கரைசெட்டிபட்டி புதுக்கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    மகாநதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் நடந்த தகராறை தொடர்ந்து ரமேஷ் குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு உறவினர் ஒருவர், ரமேஷின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் இது பற்றி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மகாநதி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மகாநதியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் ஓமலூர் போலீசார், மகாநதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஓமலூர் போலீசார், சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து மகாநதி எப்படி இறந்தார்? என்று ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் இறந்ததால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 3 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார்.
    • எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் லுத்ரன் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் மனைவி சசி பிரபா (வயது 29). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த சரண்ராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் சம்பவத்தன்று தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசி பிரபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
    • அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள பெரியாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு கருப்பையில் ஏற்பட்ட நோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

    இதையடுத்து தருமபுரி-சேலம் நேதாஜி பைபாஸ் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வளர்மதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த 22-ந்தேதியன்று வளர்மதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு வளர்மதியின் மூளை செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

    வளர்மதியை மீட்பதற்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு முயற்சித்துள்ளனர்.

    பல லட்ச ரூபாய் செலவழித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வளர்மதியை கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதியின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு தருமபுரி வந்தனர்.

    பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி திரிபுரசுந்தரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திரிபுரசுந்தரி அந்த பகுதியில் உள்ள வயல் வெளிக்கு சென்றார்.

    நீண்ட நேரமாக இவர் வராததால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் வயலுக்கு சென்று பார்த்தபோது திரிபுரசுந்தரி அங்கு உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. திரிபுரசுந்தரி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கடந்த 22-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது அமுதாவை பாம்பு கடித்தது.
    • திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பூர்:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் . இவரது மனைவி அமுதா (வயது 45). இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் குடியிருந்து விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது அமுதாவை பாம்பு கடித்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை அமுதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் அமுதா இறந்துள்ளார். அமுதாவின் சாவிற்கு டாக்டர்கள் தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நடுவூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை தேவியை முட்டி கீழே தள்ளியது.
    • தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு பட்டிபாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவி (வயது 37).

    இவர் நேற்று ஏற்காடு டவுன் பகுதிக்கு வந்து விட்டு தனது ஊரான பட்டி பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். நடுவூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை தேவியை முட்டி கீழே தள்ளியது.

    இதில் தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் தேவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. பெண் பக்தர்கள் வேப்பிலையை அணிந்து கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரை சேர்ந்த காந்திமதி (வயது 58) என்பவர் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    அவர் கோவிலை சுற்றி வலம் வந்த போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×