search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மோற்வம்"

    திருப்பதி பிரம்மோற்சவத்தின் சிரசு உற்சவமான கருட சேவை இன்று இரவு விமரிசையாக நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்வ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 4-ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் ஏழு மலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் சிரசு உற்சவமான கருட சேவை இன்று இரவு விமரிசையாக நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். இதையொட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலைகள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன.

    முன்னதாக, இன்று காலை நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்தார். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கருடசேவைக்கான பூர்வாங்க நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    இதில் கருடனுக்கு அணிவிப்பதற்காக பெருமாளின் லட்சுமி ஆரம், மகரகண்டி, சகஸ்ரநாமாவளி ஆரம் உள்ளிட்ட சிறப்பு ஆபரணங்கள் ஊர்வலமாக வாகன மண்டபத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த ஆபரணங்களை அணிவித்த பிறகு இரவு 7 மணிக்கு கருட சேவை புறப்பாடு தொடங்குகிறது. பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாட வீதிகளில் வலம் வரும் கருட வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

    கருட சேவையையொட்டி திருப்பதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் சிறப்பு மலர் அலங்காரம், மின் விளக்கு அலங்காரங்கள் பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    கருட சேவையில் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் இன்று காலை 10 மணி முதல் பக்தர்கள் மாட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்குகளில் காத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த அரங்குகளுக்குள் செல்லவும், அவற்றில் இருந்து வெளியே வரவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அரங்குகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை காத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் அரங்குகளில் காத்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கருட சேவையையொட்டி தர்ம தரிசனம் தவிர அனைத்து தரிசனங்களும் இன்று ரத்து செய்யப்பட்டது.

    மேலும், நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை காலை 8 மணி வரை மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அலிபிரிக்கு வந்த பக்தர்களுக்கு போக்குவரத்து நிபந்தனைகள் அடங்கிய வரைப் படம் அளிக்கப்பட்டது.

    மேலும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த 46 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த விவரங்கள் ‘கூகுள்’ வரைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரத்யேக ஆப்ஸ் (செயலி) உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள நிறுத்தங்களில் வாகனங்கள் நிறைந்து விட்டால் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு பணியில் கூடுதலாக 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    ×