search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி பாசனம்"

    • 4-வது மண்டலத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • பொங்கலூர் வழியாகச் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

    பல்லடம் :

    திருமூர்த்தி அணையில் இருந்து பல்லடம், பொங்கலூர், வெள்ளகோவில், காங்கேயம் உள்பட பல்வேறு இடங்களில் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் பாசனம் நடைபெற்று வருகிறது. தற்போது 4-வது மண்டலத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது நான்கு சுற்றுகள் மட்டுமே விடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பி.ஏ.பி பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பொங்கலூர் வழியாகச் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தலைமையில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒன்று திரண்டனர். அங்கிருந்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே செல்லும் பி.ஏ.பி வாய்காலில் இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசும்போது, வழக்கமாக 7 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு 4 சுற்று மட்டுமே வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள தண்ணீரை தனியார் கோழி பண்ணைகளுக்கும், நார் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் நிறுவனங்களுக்கும் திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுக்கு 7 சுற்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பொங்கலூர் பி.ஏ.பி உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பிரதிநிதிகள் பல்லடம் தாசில்தார் அலுவலகம் சென்று அங்கு தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ,கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,பிரச்சார குழு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பி.ஏ.பி பாசனத்துக்கு உட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • 2011ம் ஆண்டு முதல் 2015 வரை 224 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மடத்துக்குளம் :

    திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை மூலம் பி.ஏ.பி பாசனத்துக்கு உட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு போதிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் இல்லை. எனவே தொகுப்பு அணைகளான ஆழியாறு மற்றும் சர்க்கார்பதி நீர்மின் நிலையத்தில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டுவரப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    எனவே பாசனத்துக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக பெறப்படும் தண்ணீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து சேகரித்து, பரம்பிக்குளம் அணை மற்றும் சர்க்கார்பதி வழியாக, திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்படுகிறது.

    இக்கால்வாய் மலைப்பகுதியில் 49 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. நீண்ட கால பயன்பாடு, மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு, மரங்களின் வேர்கள் ஊடுருவல் என கரைகள் வலுவிழந்தது. திட்ட தொகுப்பு அணைகளில் முழுமையான நீர் எடுக்க முடியாததோடு, நீர் இழப்பும் அதிகரித்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015 வரை 224 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கி.மீ., 30 முதல் 49 வரை 5.26 கி.மீ., உள்ள கால்வாய் பகுதி புதுப்பிக்கப்படாமல் விடுபட்டது. விடுபட்ட பகுதிகளை புதுப்பிக்க கடந்த ஆண்டு தொழில்நுட்ப ஒப்புதல் பெறப்பட்டு ரூ.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சமீபத்தில் துவங்கியது. குறிப்பாக நல்லாறு, காண்டூர் கால்வாயுடன் இணையும் ஷட்டர் பகுதியில் கரைகள் அதிக சேதமடைந்துள்ளது.

    அப்பகுதியில் கால்வாய் கரைகளில் மரங்களின் வேர்கள் ஊருடுவி கான்கிரீட் சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் நல்லாற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் காண்டூர் கால்வாய் ஷட்டர் மற்றும் சரிவு கட்டமைப்பும் சேதத்துக்குள்ளாகிறது. எனவே தற்போது அப்பகுதியில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையாக இருபுறமும் பழைய கரை அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    அடித்தளத்திலும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இது குறித்து வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் கூறுகையில்,காண்டூர் கால்வாய் வினாடிக்கு 1,150 கனஅடி நீர் கொண்டு வரும் வகையில் வி வடிவில் திட்டமிட்டு கட்டப்பட்டது. கால்வாய் பல இடங்களில் சேதமடைந்து நீர் விரயம் அதிகரித்திருந்தது. படிப்படியாக புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நீர் விரயத்தை குறைத்து முழு கொள்ளளவில் தண்ணீர் வரும் என எதிர்பார்த்துள்ளோம்.

    தற்போது திட்ட தொகுப்பு அணைகளான நிராறு, சோலையாறு, காதம்பாறை,பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    எனவே காண்டூர் கால்வாய் புதுப்பிப்பு பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடித்து தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற வேண்டும். இல்லையெனில் அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வர முடியாமல் உபரியாக திறந்து விடப்படும் நிலையே உருவாகும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×