search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி"

    • மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் சேராது.
    • பாஜகவுடனான ஐக்கிய ஜனதாதள உறவு நன்றாக இருக்கிறது.

    பாட்னா:

    பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதாதளத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அம்மாநிலத்தில் வலுவான ஆளும் கட்சி கூட்டணியாக இது கருதப்பட்ட நிலையில், அண்மை காலமாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பீகாரில் உச்சநிலையில் இருந்தபோது அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த திட்டத்தை ஆதரித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் என்ற முறையில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை.

    மத்திய அமைச்சரவையில் அக்கட்சியின் சார்பில் இடம் பெற்றிருந்த ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைந்ததால், தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மத்திய அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை. 


    இந்நிலையில் பாட்னாவில் நேற்று ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர மாட்டோம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவையில் இணைவதில்லை என்று முடிவு செய்தோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்ற முடிவை எங்கள் தலைவர் நிதீஷ் குமார் எடுத்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நீங்கள் முதலமைச்சரிடம் கேட்க வேண்டும். பாஜகவுடனான எங்கள் கட்சியின் உறவு சரியாக உள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவளித்தது. கூட்டணி தொடர்பான எங்களின் உறுதிப்பாட்டை இதைவிட வலுவாக நிரூபிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×