search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டினி குறியீடு"

    • உலக அளவில் பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • தவறான மதிப்பீடு, தவறான நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    உலக அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டு தோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட் வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இப்பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இதில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரம், 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உடல் எடை, உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் ஆகியவற்றை கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபை, யுனிசெப் உள்ளிட்டவைகளிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியாகிறது.

    இந்நிலையில் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 125 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107-வது இடத்தில் இருந்தது.

    இந்த ஆண்டு 4 இடங்கள் பின் தங்கி உள்ளது. உலக அளவில் பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இது பட்டினி அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

    அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102-வது இடத்திலும், வங்காளதேசம் 81-வது இடத்திலும், நேபாளம் 69-வது இடத்திலும், இலங்கை 60-வது இடத்திலும் உள்ளது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா சவுத் ஆப் தி சஹாரா ஆகிய பிராந்தியங்கள் கடைசி இடங்களில் உள்ளன.

    இந்த உலக பட்டினிக் குறியீடு பட்டியலை இந்தியா நிராகரித்துள்ளது. இப்பட்டியல், இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும், தவறான மதிப்பீடு, தவறான நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×