search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சபாண்டவர் மண்டபம்"

    • பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பகுதி, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    இதையடுத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அர்ச்சுணன் தபசு பகுதியை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் ரசிப்பது வழக்கம். இந்நிலையில் பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தொல்லியல்துறையினர் மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது ரசாயன சிமெண்ட் கலவை வைத்து பராமரித்து வந்தனர். தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் போது பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரிசல் வழியாக வரும் மழை நீரில் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறை தொல்பொருள் ஆய்வாளர்கள், பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு என்ஜினீயர்கள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் திடீர் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ×